Monday, January 25, 2010

லீலை திரைப்பட பாடல் விமர்சனம்

படம்: லீலை
இசை: சதீஷ் சக்ரவர்த்தி
பாடல்கள்: கவிஞர் வாலி, பா.விஜய்
தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் V.ரவிச்சந்திரன்
இயக்கம்: ஆன்ட்ரூ லூயிஸ்




ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது(படம் ஏன் இன்னமும் வெளிவரவில்லை என்பது புரியாத புதிர்).

புது இசையமைப்பாளரின் இசையில் வெளிவந்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் பற்றி நீண்ட நாட்களாகவே ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஒருவழியாக இன்றுதான் அதற்கு (எனக்கு) நேரம் வந்தது.

1. பென்னிதயாள், சுனிதா சாரதி, சுவி, லெனான் ஜேம்ஸ் பாடியிருக்கும் "கொஞ்சம் ஒட்டிப்போ" என்ற பாடல் வரிகளை முழுவதுமாக சரியாக எழுதி அனுப்புவர்களுக்கு படத்தின் ஏதாவது ஒரு ஏரியாவின் விநியோக உரிமை வழங்கப்படும் என்று போட்டியே நடத்தலாம் (வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு, விளம்பரத்திற்கு விளம்பரமும் ஆச்சு). ஓரே இரைச்சல்...... பாடலை எழுதியவர் பா.விஜய் என்று சி.டி கவரை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்குமேல் இந்த பாடலைப்பற்றி எழுத எதுவுமில்லை. தாளம் என்னும் வேதாளத்தை ரசிப்பவர்களுக்கு பிடிக்கலாம்.

2. பா.விஜய் எழுதி பென்னிதயாள் பாடியிருக்கும் " பொன்மாலை பொழுது" என்ற பாடல் முழுவதும் கவிநயமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டிருக்கிறார் விஜய், பாடல் வரிகள் முழுவதும் அழகு என்று முடிவது கொள்ளை அழகு, இத்தகைய பாடல்கள் எழுதும்போது இதற்கு முன்பு வந்த பாடல்களின் கருத்துகள் வராமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் அதே நேரம் தனித்து காட்டவேண்டியதும் அவசியம், அதை இந்தபாடலில் பா.விஜய் அழகாக கையாண்டுள்ளார்.
வரிகளையும் வார்த்தைகளையும் சிதைக்காத வாத்திய கருவிகள் மூலம் பாடலை மன‌திற்கு கொண்டுசெல்வதில் இசையமப்பாளர் மனம்கவர்கிறார்.

3. வாலி எழுதி இசையமைப்பாளரே பாடியிருக்கும் "ஜில்லென்று ஒரு கலவரம்" பாடல் மற்றுமொறு மியூசிக்கல் ட்ரீட், ஒரு இசையமைப்பாளார் இவ்வளவு இனிமையாக பாடமுடிவது ஆச்சர்யமூட்டுகிறது, இவர் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொண்டால் பிரபல பாடகராகவும் பரிமளிக்கலாம். பல்லவியில் இளம் கவிஞர்களுக்கு சவால்விடும் வாலி, சரணத்தில் வழக்கமான வாலியாகிவிடுகிறார்.

4. ஹரிச்சரன் பாடிய "உன்னைப்பார்த்த பின்பு" என்ற சோகப்பாடலை, சோகப்பாடல் என்ற சாயலே இல்லாமல் தடதடக்கும் இசையால் வித்தியாசமாக தந்திருக்கிறார்.

" வானம் பார்த்த பின்பு,
பூமி பூத்தது இங்கு"

என்ற வித்தியாசமான கற்பனை மூலமும் (நம்ம ஊரில் வானம் பார்த்த பூமி என்று பூத்தது)

" காதல் என்பது
கடவுள் போன்றது
உள்ளபோதும் இல்லை
என்று எண்ணத்தோன்றும்"
என்று காதலின் வலியை நுட்பமாக ஆராயும் போதும் பளிச்சென தன் அனுபவத்தை காட்டிச்செல்கிறார் வாலி.

5. "ஒரு கிளி ஒரு கிளி" இந்த பாடல்தான் இந்த ஆல்பத்தின் பெஸ்ட் சாங். இசையமைப்பாளர் உடன் இணைந்து பாடியிருப்பது ஷ்ரேயா கோஷல் (பொண்ணு மறுபடியும் மறுபடியும் தேசிய விருது வாங்கிக்கிட்டே இருக்கு வாழ்த்துக்கள்!). இதே பாடலை சதீஷ் மட்டும் சோகமாகவும் பாடியுள்ளார். என்ன சொல்ல மனதை மயிலிறகாய் வருடிச்செல்லும் இசையுடன் கந்தர்வ குரலும் இணைந்து கொண்டால் கேட்க வேண்டுமா? அற்புதமான இசைவிருந்துதான் போங்கள்.....
இந்த பாடலையும் எழுதியிருப்பவர் வாலி.

" விழியல்ல
விரலிது - ஓர்
மடல் வரைந்தது
உயிரல்ல‌
உயிலிது
உனக்குத்தான் உரியது"

என்றும்

"உன் கைகள் தொட நாணம்தான் விடாதோ"

என்றும் எழுதும் போதும் எம்.ஜி.ஆர் காலத்து வாலி நம் கண் முன் தெரிகிறார். டூயட்டிற்கும் சோகப்பாட்டிற்கும் ஒரே வரிகளை அதை அற்புதமாக பொருந்திப் போகும்படி செய்துள்ளார்.

பாடலின் மெட்டில் "வைகாசி நிலவே" (உன்னாலே உன்னாலே) சாயல் வருவதை தவிர்த்திருக்க்கலாம்.



எந்த ஒரு படைப்பாளிக்கும் முதல்படைப்பு மிகமிக முக்கியமாகும், அந்த வகையில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சதீஷ் சக்ரவர்த்திக்கு இந்த படம் மிகப்பெரிய தொடகக்கமாக அமையவேண்டும் (அமையும்). வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இனிமையான இசை, செவிகளை உறுத்தாத மெட்டு, நவீன இசைக்கருவிகளை பயன்படுத்தும் விதம் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.

நண்பர்களே முன்மொழிந்து வழிமொழிகிறேன் பாடலை கேட்டுப்பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.

பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.


அன்புடன்

காத்தவராயன்

1 comment:

  1. Hi,

    Your comments on "Cable Sankar's blog" for the "Review of Raavanan" led me here. Though I was a fan of Maniratnam, I agree with your points... It was nicely written... Keep it up.

    I've read your previous 2 posts here... I found the flow of writing is really good. But why did you stop writing?

    Do write again... and do not restrict yourself only with film music reviews... Keep going...

    All the best...

    Regards,
    Rajkumar

    ReplyDelete