படம்: எந்திரன்
நடிப்பு: ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்கள்: வைரமுத்து, பா.விஜய், கார்க்கி
இயக்கம்: ஷங்கர்
பாடல்: புதிய மனிதா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஏ.ஆர்.ரகுமான்,கதீஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பொதுவாக ஓப்பனிங் பாடலில் தன் புகழ் மற்றும் தன் ரசிகன் புகழ்பாடும் ரஜினிகாந்த், இதில் வழக்கத்திற்கு மாறாக எந்திரன் புகழ் பாடியிருக்கிறார். பதிலுக்கு இரண்டாவது சரணத்தில் எந்திரன் தன் “எஜமான்” புகழ்பாடுகிறது. சென்டிமென்டாக சிவாஜிக்கு பிறகு பாலு பாடியிருக்கும் இந்த பாடலின் பிரதான அம்சம் வைரமுத்துவின் வரிகள் மற்றும் அறிமுக பாடகி கதீஜாவின் குரல். நல்ல பயிற்சியோடு பிற இசையமைப்பாளர்களிடமும் தொடர்ந்து பாடினால் கதீஜாவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.
“ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி, ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி” போன்ற தனது ஸ்பெஷாலிட்டி வரிகளைக் காட்டிலும் “கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும், அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை”, “ஆண் பெற்றவன் ஆண்மகனே”, ” என் தந்தை மொழி தமிழ் அல்லவா” போன்ற வரிகளில் கவனத்தை ஈர்க்கிறார் வைரமுத்து.
விஞ்ஞானிக்கும் எந்திரனுக்கும் தனித்தனி குரல்களை பயன்படுத்தி வித்தியாசப்படுத்தியிருக்கலாம். பாட்டுக்கு மெட்டு போட்டது போலத் தெரியும் இந்த பாடலின் வரிகளும் மெட்டும் மொத்தப்பாடல் முழுவதும் ஓன்றுடன் ஒன்று ஒடாமல் பயனிப்பது பலவீனம். ஓப்பனிங் பாடலுக்குரிய துள்ளல் இல்லாதது சராசரி ரசிகனுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
பாடல்: காதல் அணுக்கள்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: வைரமுத்து
70 களில் வந்த ராஜா பாடலின் (தேவன் திருச்சபை மலர்களே – அவர் எனக்கே சொந்தம்) சாயலில் தொடங்கும் இந்த பாடல் ரகுமானின் ஸ்பெஷாலிட்டியான பல்லவி சரணம் என்ற கட்டுமானத்திற்குள் அடங்காத அற்புதமான மெல்லிசைப் பாடல். பாடலின் துவக்கத்தில் வரும் மெல்லிய கிடார் இசை மனதை மயிலிறகாய் வருடிச்செல்கிறது. விஜய் பிரகாஷ், ரகுமான் சாயலில் பாடியிருப்பது உறுத்தல். காந்தர்வக் குரலில் மயக்கும் ஷ்ரேயாவிடம் ஏனைய வடமொழி பாடகர்கள் உச்சரிப்பு பயிற்சியே பெறலாம்.
“பட்டாம் பூச்சி கால்களை கொண்டுதான் ருசியறியும்”, “ஓடுகிற தண்ணியில் ஆக்சிஜன் மிக அதிகம்” போன்ற அறிவியல் வரிகள் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் காதல் பாடலுக்கு தேவையில்லாதது. விஞ்ஞானப்படம் என்றால் காதலனும் காதலியும் காதல் செய்யும் போது கூடவா அறிவியல் தமிழில் பாடவேண்டும்!
” நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு எந்தன் நெஞ்சம் வீங்கிவிட்டதே” (காதலனை காணத ஏக்கத்தில் விடும் பெரும் மூச்சினால் நெஞ்சஞம் வீங்கி விட்டதாம்) என்ற வரியில் வைரமுத்துவின் அக்மார்க் குறும்பு ரசிக்க வைக்கிறது.
பாடல்: அரிமா அரிமா
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்க்கம்
பாடலாசிரியர்: வைரமுத்து
ரஜினி புகழ்பாடும் கம்பீரமான வரிகளோடு துவங்கும் இந்த காமம் கலந்த காதல் பாடலில் அரிமா அரிமா என்ற வரிகளுக்கு ஏற்ப இசையும் பாடகரின் குரலும் கர்ஜிப்பது ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தும்.
” உன் போல் ஒரு பொன்மான் கிடைத்தால் யெம்மா சும்மா விடுமா?”, “சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில் சட்டென்று மோகம் பொங்கிற்றே” போன்ற காமம் ததும்பாத காதல் வரிகளை வைரமுத்து தன்னுடைய பாணியில் பாடல் முழுவதும் பயன்படுத்தியிருப்பது பாடலுக்கு பெரும் பலம் சேர்க்கிறது. அதை ஹரிஹரன் பாடியிருக்கும் விதம் அத்தனை அழகு.
குசேலன் படம் தொடங்குவதற்கு முன்பே எந்திரன் பட வேலைகளை ஷங்கர் துவங்கி விட்டார் என்பதை ஊர் அறியும். இந்த பாடலின் மெட்டும், குசேலன் படத்தில் உள்ள “ஓம் ஷாரரே” என்ற பாடலின் மெட்டும் எப்படி ஒரே மாதிரி அமைந்தது என்பதை ஏ.ஆர்.ரகுமானும், ஜி.வி.பிரகாஷூம் தான் தெளிவு படுத்தவேண்டும். ஒரு வேளை ரகுமானுக்கு தெரியாமலே மெட்டு களவு போகிறதோ என்னவோ?
பாடல்: கிளிமாஞ்சாரோ
பாடியவர்கள்: ஜாவித் அலி, சின்மயி
பாடலாசிரியர்: பா.விஜய்
முதல்முறை கேட்டவுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த பழங்குடிப்பாடல் தான் தற்போதய நிலவரப்படி முன்னனியில் இருக்கிறது.
அதிரடியான இசை, புதுமையான மெட்டு, இதுவரை கேட்டிராத ஒலிக்கோர்வை மூலம் பாடலின் தரத்தை எங்கோ உயர்த்திச் செல்கிறார் ரகுமான். முன்வரிசை ரசிகர்கள் திரையின் முன்னால் ஆடுவதற்கு தோதான பாடல் இது.
வழக்கமாக பெரும்பாலான ஷங்கர் படங்களில் கிளைமாக்ஸ்க்கு சற்று முன்பு வரும் அதிரடிப் பாடலுக்கு அதிரிபுதிரியாக வரிகளை எழுதி கைதட்டல் வாங்கும் கவிஞர் வாலி இந்த படத்திற்கு எழுதாத குறையை அவரது சிஷ்யர் பா.விஜய் தீர்த்து வைக்கிறார். மெட்டிற்கு தேவையான எளிமையான சந்த வார்த்தைகளை எழுதி பாடலை மெருகேற்றும் விஜயின் கிளிமாஞ்சாரோ வார்த்தை கவனிக்கத்தக்கது. இந்த வார்த்தையை தமிழ் அகராதியில் தேடினால் கிடைக்காது, ஏனென்றால் கிளிமாஞ்சாரோ என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரிமலைத் தொடரின் பெயர்.
பாடல்: பூம் பூம் ரோபோடா…
பாடியவர்கள்: கீர்த்தி சகாத்தியா, யோகி, ஸ்வேதா, தன்வீஷா
பாடலாசிரியர்: கார்க்கி
இந்த பாடல் படத்தில் இருக்குமா என்பது சந்தேகமே, படம் முடிந்த பின்னர் வரும் ரோலிங் டைட்டில் / மேக்கிங் ஆப் எந்திரன் பாடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்குள்ளது.
அதிரடியான வித்தியாசமான இந்த பாடலின் கவன ஈர்ப்பாக இருப்பவர் சுஜாதாவின் குரலில் அப்படியே பாடும் அவரது மகள் ஸ்வேதாவின் குரலில் ஏகத்துக்கும் இளமைத் துள்ளல்.
“தவமின்றி வரங்கள் தருவதனாலே மின்சார கண்ணணோ?” என்ற வரியின் மூலம் எந்திரனை கலியுக கண்ணனாக உருவகப்படுத்தியிருக்கும் கார்க்கி கவனத்தை ஈர்த்தாலும் ஒட்டுமொத்த பாடலின் நடையில் தந்தையை பின்பற்றுவது அவரது வளர்ச்சிக்கு நல்லதல்ல.
பாடல்: இரும்பிலே ஒரு இருதயம்
பாடியவர்கள்:ஏ.ஆர்.ரகுமான், கிரிஸி
பாடலாசிரியர்: கார்க்கி
பாடல் வரிகளை கேட்கும்போது எந்திரன் விஞ்ஞானியின் வேடத்தில் சென்று காதலிக்க முயற்சி செய்யும் போட்டிப்பாடல் போலத் தோன்றுகிறது. இந்த வித்தியாசமான சூழலுக்கு அற்புதமாக வந்திருக்க வேண்டிய பாடல் இந்த ஆல்பத்தின் கடைசி இடத்தை பிடித்திருப்பது ஷங்கருக்கும் ரகுமானுக்கும் ஓர் பின்னடைவே.
கடைசிவரை இழுத்தடித்து கடைசியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு கடைசியாக படமாக்கப்பட்ட இந்த பாடலுக்கு ரகுமான் எந்த சிரத்தையும் எடுக்காமல் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு பயன்படுத்திய ”இளமை” என்ற பாடலை அப்படியே கலந்து கட்டி கொடுத்துள்ளார். ஷங்கர் இதை கவனிக்காதது ஆச்சர்யம்.
கார்க்கி எழுதிய இந்த பாடலின் நடையில் வைரமுத்துவின் சாயல் போன்ற பிரமை நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை “எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா?”, ” உளவியல் மொழிகளில் இந்திரன்” “பூஜ்ஜியம் ஒன்றோடு (1-0 லாஜிக் கேட்)” போன்ற வரிகள் நன்றாக இருந்தும்.
“மின் மீன்கள் விண்ணோடு” என்ற வரியில் “விண் மீன்கள்” என்று அல்லவா வரவேண்டும் !
“நீ தூங்கும் நேரத்தில் நான் என்னை அணைப்பேன்” என்ற வரியில் எந்திரன் எப்படி தன்னைத் தானே அணைத்துக்கொள்ளும்? உன்னை என்று அல்லவா வரவேண்டும் !
அணை என்றால் Shutdown என்று ஒரு அர்த்தம் உள்ளது, ஆனால் சர்ச்சைக்குரிய அந்த வரியை அடுத்து சில வரிகள் கழித்து வரும் வரிகளை கொஞ்சம் கவனியுங்கள் “shutdown செய்யாமல் இரவினில் துடித்தேன்”.
இந்த முரண்பாடுகளுக்கு காரணம் கார்க்கியின் அனுபவமின்மையே....
மொத்தத்தில் கார்க்கி நல்ல துவக்கத்தை வீணடித்துள்ளார்.
ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு மியூசிக் ட்ராக் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில் பாடல்களை கேட்டவுடன் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று அறிவியல் தொடர்பான எல்லா பாடங்களையும் ஓரே நேரத்தில் படித்துவிட்டு வந்தது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. வழக்கமாக ஷங்கர் படங்களில் கிளாஸிக்கல் டச் இருக்கும் அது இந்த படத்தில் மிஸ்ஸிங். எஃகு, அஃற்றினை, சிலிக்கான், ஏழாம் அறிவு போன்ற வார்த்தைகள் வெவ்வேறு பாடல்களில் திரும்ப திரும்ப வருவதை தவிர்த்திருக்கலாம். சிறு சிறு குறைகளும் படம் வருவதற்குள் காணாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது.
-காத்தவராயன்